சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி - கண்ணம்மா
வானக் கருமைகொல்லோ?
பட்டு கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடு - நிசியில்
தெரியும் நக்ஷதிரங்களடீ!
சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்!
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடி!
கோலக்குயி லோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ - கண்ணம்மா
மருவக் காதல்கொண்டேன்.
சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திர மேதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோடீ? - இது பார்,
கன்னத்து முத்தமொன்று!
- பாரதியார்